கவிதை
தேவி ஜெயதேவியின் மனவெளி
சிறுகதை
அந்நியச் சகோதரர்கள் : அழகுநிலா
உண்மையைப் போன்ற கதை : சூர்ய ரத்னா
தமிழ்மொழி விழா!
வண்ணமயமான விழா - ‘தமிழா தமிழா’
சொற்போர் 2011 : மேடையைக் கடந்த பேச்சுப் புயல்!
திருக்குறள் விழா 2011 : திருக்குறளை வாழ்க்கையில் பின்பற்றுங்கள்- சுகிசிவம்!
பழைய, புதிய திரைப்படங்களில் தமிழின் புழக்கம்-பட்டிமன்றம்
சொற்சிலம்பம் 2011 : அரையிறுதிச்சுற்று 1
தமிழோடு வளர்வோம் - கருத்தரங்கு
முத்தமிழ் விழா 2011 ; லேனா தமிழ்வானனின் சிறப்புரை
தமிழ் பேச்சாளர் மன்ற போட்டிகள் ; அரங்கம் அதிர்ந்தது!
தொழில் தொடங்குவதும் நிதி பற்றிய ஆலோசனைகளும் தமிழில் உரை
அரங்கம் 2011 ; துடிப்புடன் சிங்கைத் தமிழ் நாடகங்கள்!
சமூக மீடியாவும் & தமிழ் மொழியும் ; மாணவர்களில் கையில்!
அரங்கத்தில் இன்று ; புத்தகங்கள் திரைப்படமானால்?
சித்திரைத் திருவிழா - தமிழ் வருடப்பிறப்பு கொண்டாட்டங்கள்
கலக்கல் 2011 ; நடிப்பில் கலக்கிய மாணவர்கள்!
சொற்சிலம்பம் 2011 ; அரையிறுதிச் சுற்று -2
நூலகத்தில் குதூகலம் ; மாணவர்களின் கொண்டாட்டத் தமிழ்!
சொற்சிலம்பம் 2011 ; இறுதிச் சுற்று!
ராபிள்ஸ் கல்வி நிலையத்தில் மின்மினி 2011
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் பட்டிமன்றம்
நற்பணி பேரவை-சிண்டா இணைந்த குடும்பதின விழா
கட்டுரை
கனவதிகாரம் : படிடா வாசு! : இந்திரஜித்
அன்புடன் ஓர் அலசல் : கிணற்றுத்தவளை : டாக்டர் சபா.இராஜேந்திரன்
இடைவெளிகள் - 3 : இராம.வைரவன்
சாதாரணங்களின் அற்புதம் – சி.மோகன். : சுப்ரமணியன் ரமேஷ்
கமலாதேவி அரவிந்தனின் 'நுவல்' முதலான சிறுகதைகள். : இராம கண்ணபிரான்
சமூகம்
சிங்கப்பூர் கிளிஷே : ஷானவாஸ்
சிண்டா CEO திரு.இராஜசேரின் பேட்டி : ஆதித்யா
தேக்கா ரவுண்ட் அப் : மணி சரவணன்
சிங்கப்பூர் நூலகங்களில்!
சிங்கப்பூரில் பண்டிட் இராமலிங்கம் வளர்த்த பைந்தமிழ் இசை : செ.ப.பன்னீர் செல்வம்
மாணவர்களும் சட்டமும் : வழக்கறிஞர் கலாமோகன்
மலேசியா
எனது முதல் கவிதை : ந.பச்சைபாலன்
சினிமா
கோ – ஒரு பத்திரிகையாளன் அரசனாகிறான்.! : எம்.கே.குமார்
பெருமை சேர்த்த டேப்ரெக்கார்டர் : புதுமைத்தேனீ மா. அன்பழகன்
காதல் : யாருக்கு யார் சொந்தம்? : சித்ரா ரமேஷ்
தமிழகம்
சென்னையில் அண்மையில் ; கவிவானம் தாகூர் : பிச்சினிக்காடு இளங்கோ
புது நிகழ்வுகள்
இளையர்களை செதுக்குகிறது சிற்பிகள் மன்றம் : திருச்செல்வி
இளமைப் பக்கம்
பெண்கள் பக்கம்
Skip Navigation Links
Skip Navigation Links
 
 
பெருமை சேர்த்த டேப்ரெக்கார்டர்
 
எங்கள் இயக்குநர் பாலசந்தர் படக்குழுவில் முதன் முதலாக வண்ணப்படம்  எடுக்கப் போகிறோம் எனக் கேள்விப்பட்டவுடன் எல்லோரும் மகிழ்ச்சியில்  மூழ்கினோம். சர்மா என்பவரும் மணி என்பவரும் இணைந்து 'நான்கு சுவர்கள்' என்கிற படத்தை எடுக்கத் திட்டமிட்டார்கள். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், வாணிஸ்ரீ, டி.கே.பகவதி, நாகேஷ், ஸ்ரீவித்யா, விஜயலலிதா(?) போன்றோரை நடிக்க வைப்பதாக முடிவு செய்யப்பட்டது.

சில நாட்கள் சென்னை ஸ்டுடியோக்களில் படமாக்கிவிட்டு கோவாவில் ஒருமாத  வெளிப்புறப் படப்பிடிப்புக்குச் செல்லத் திட்டமிடப்பட்டது. இது 1970 என நினைவு. வெளியூர் படப்பிடிப்பு எனில் எல்லோரும் மகிச்சியடைவர். காரணம், தானே தனக்கு வாங்கிக்கொண்டால் சார்மினார் சிகரெட்.. சினிமாக் கம்பெனியில் என்றால் 555 சிகரெட் அல்லவா பற்ற வைப்பர் என்பார்கள். அத்துடன் பெரியஹோட்டல் வசதி; கிடைக்காத உயர்ந்த சாப்பாடு; மாலை 6 மணிவரைதான் வேலை; பின்னர் கூத்துக் கும்மாளம்தான்.- இப்படித்தான் எல்லாரும் பொதுவாக எண்ணுவார்கள். என்னைப் பொறுத்த வரையில், இந்தக் கோவா பயணம் என்பதை ஒரு சுற்றுலா சென்று வருவதைப்போல் உணர்ந்து மகிழ்ச்சியடைந்தேன்.  அத்துடன்  ஊட்டி, கொடைக்கானல், ராமேஸ்வரம், கன்னியாகுமரி கூடப்பார்த்திராத அப்போதைய கிணற்றுத் தவளை நான். சொல்லப் பட்டவைகளில் கொடைக்கானல் தவிர மற்ற இடங்களை நான் இன்றுவரைகூடப் பார்த்ததில்லை. தாய்நாட்டிலேயே பல இடங்களை இன்னும் பார்க்காதபோது, வெளிநாடுகள் என்ன வேண்டிக்கிடக்கிறது என என் உள்மனம் ஒருபுறத்தில் சொல்லிக் கொண்டுதானிருக்கிறது. 

கோவாவிற்குப் புறப்படும் சில நாட்களுக்கு முன்பு, சிங்கப்பூரில் உள்ள என்  அண்ணன் ஜெகதீசனுடைய நண்பர் ஒருவர், அவருக்கு ஏதோ நான் செய்த ஓர்  உதவிக்காகச் சென்னையில் அப்போதிருந்த எனக்கு கேசட் டேப் ரெக்கார்டர்  ஒன்றை அன்பளிப்பாக வாங்கியனுப்பியிருந்தார்.  நான்கு சுவர்கள் படத்தின்  இசையமைப்பு என் பக்கத்துக் குடியிருப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன் தான். அப்படத்தின் பாடல் பதிவின்போதே ஏ.வி.எம் ரெக்கார்டிங் தியேட்டர் எஞ்சினியர் சம்பத் அவர்களிடம் என் டேப்ரெக்கார்டரைக் கொடுத்து அப் பாடல்களைப் பதிவு செய்துகொண்டேன். அப்போது பாடல்களை யாரும் கேசட் மூலம் கேட்டது இல்லை. காரணம் இப்படிப்பட்ட டேப்ரெக்கார்டரை யாரும் அதற்கு முன்பு பார்த்ததுமில்லை.

எங்கள் திரைப்பட அலுவலகங்களிலும், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் என் டேப்ரெக்கார்டரை அதிசயமாகப் பார்ப்பதும், பாடவைத்துக் கேட்பதுமாக  இருந்தார்கள்.  'என் வீட்டில் ஒரு நாள் கொண்டுபோய்க் காண்பித்து விட்டுத்  தருகிறேன்' என என்னிடம் பலர் இரவல் கேட்பார்கள். நானும் கொஞ்சம் கிராக்கி செய்துகொண்டு கொடுப்பேன். ஏன் என்னுடைய இயக்குநர் பாலசந்தர் அவர்களே ' இன்றைக்கு கொடுப்பா, என் வீட்டில் காட்டிவிட்டுத் தருகிறேன்' என்றும்;நடிகர் நாகேஷ் அவர்களும் அதேபோல் கேட்க, எனக்கு ஒரே பெருமை தாங்க முடிய வில்லை. அக்காலத்தில் ஒருசாண் விட்டமுள்ள இரண்டு சுழலும் சக்கரங்களை ஒரு இயந்திரப் பெட்டியில் பொருத்தியிருப்பார்கள். ஒன்றிலிருந்து ஒன்றுக்கு டேப் என்கிற நாடா மூலம் இணைத்துப் பாடவைக்கிற டேப் ரெக்கார்டர் பெட்டிதான் இருந்தது. முன்பின் இயக்கலாம். வெளிப்புறப் பாடல் காட்சிப் படப்பிடிப்புக்கு அந்தப் பெட்டியைத்தான் தூக்கிக்கொண்டு போய்ப் பயன்படுத்துவார்கள்.   அப்படிப் பட்டக் காலகட்டத்தில் ஜப்பான் தயாரிப்பான சோனி என்கிற என் கேசட்டேப் ரெக்கார்டரைப் புதுமையாகவும் விந்தையாகவும் எல்லோரும் நோக்கினர்.

பெங்களூர் வழியாகக் கோவாவிற்குப் பயணமாகப் புறப்பட்டோம். கர்நாடக  எல்லையைக் கடந்தவுடன், மகராஷ்டிரா எல்லைக்குள் போய்க்கொண்டிருக்கும் போது இன்னும் சிறிது நேரத்தில் கோவாவை நெருங்கிவிடுவோம் என்று சொல்லப்பட்டது. அதற்கு முன்பாக 'அதோ இடப்புறத்தில் ஓர் ஊர் தெரிகிறதே, அதுதான் கொங்கிணி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரும் இந்தித் திரையுலகின் முடிசூடிய இசையரசியுமான, குயில் மொழியாள் லதா மங்கேஷ்கர் பிறந்த இடம் எனக்காண்பித்தார்கள். மனத்திற்குள் அத்திசை பார்த்துக் கும்பிடு ஒன்றைப் போட்டுக் கொண்டோம். 

ஒருமாதம் தங்கி, கோவாவில் சில காட்சிகளை எடுப்பதோடு,  மூன்று பாடல்களையும் படமாக்குவதாகத் திட்டம். குறிப்பாக ஒரு பாடல் நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ள பனாஜி ஆற்றில், ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரப் படகில் ரவிச்சந்திரனும் வாணிஸ்ரீயும் இணைந்து டூயட் பாடுவதாகக் காட்சியமைப்பு. இன்னொரு படகில் கேமிராவைப் பொருத்தி, இயக்குநர், நடன இயக்குநர் சொல்கிறபடி படமாக்குவதாக ஏற்பாடு. அந்த ஆறு, பேக்வாட்டர் எனப்படும் அரை கிலோமீட்டருக்கும் குறைவில்லாத அகலமான ஆறாகும். இரும்புக்கான மூலமண்களை எடுத்துச் செல்லும் சரக்குக் கப்பல்கள் போக்கு வரத்தில் இருந்துகொண்டே இருக்கும். நிறையப் பயணிகளை ஏற்றிக் கொண்டு இக்கரைக்கும் அக்கரைக்கும் சென்று வரும் •பர்ரி எனும் இயந்திரக் கப்பல்கள்  குறுக்கிட்டுக்கொண்டே போகும். இந்தச் சூழல்களைப் பின்புறக் காட்சிகளாகக் கொண்டு கதாநாயகன் கதாநாயகி திறந்த படகின்மீது நின்று காதல் வயப்பட்டு ஆடிப்பாடி நடிக்கவேண்டும். கேமிரா வைத்துள்ள படகிலிருந்து பாடலை ஒலிக்க விட்டால் நடிகர்களுக்குக் கேட்காது என்பதால் என்னுடைய கேசட் பிளேயரை நான் கையில் வைத்துக்கொண்டு, நடிகர்கள் நிற்கும் படகின் அடிப் பகுதியில் கேமிராவின் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டு பாடலை ஓடவிடுவேன். நடிகர்கள் வரிகளுக்கேற்ப வாயசைப்பையும், உடல் அசைவுகளையும் தர வேண்டும்.   இப்பபடியாக என் கேசட் பிளேயர் உதவியுடன் மூன்று  பாடல்களையும்  படமாக்கினோம். அதன் பிறகு என் முகத்தில் பல பெருமை ரேகைகள்களைக் கட்டுவதாக எனக்குள் நானே எண்ணி மகிழ்ந்துகொண்டேன்.

வடக்குக் கோவாவின் மேற்குக் கடற்கரை. குருட்டுப் பெண்ணாக நடித்த ஸ்ரீவித்யா சிறு சிறு பாறைகளைத் தாண்டி மார்பளவு கடல் அலையில் குளிக்கும் காட்சி. அவருக்கு நீச்சல் தெரியாது. அரபிக்கடலின் அலையின் சீற்றம் மிகுதியாக இருந்தது. நடிகைக்குப் பாதுகாப்புக் கொடுத்திட வேண்டும். இயக்குநர் எல்லோரையும் பார்த்தார். நீச்சல் தெரியாதவர்கள் பெரும் பான்மையாக இருந்ததால் அவர்கள் பின்வாங்கிக்கொண்டார்கள். மீதமுள்ள ஒருசிலரில் நான்தான் நீச்சல் தெரிந்த துணிச்சல் உடைய இளையவனாகவும் இருந்தவனாகையால் என்னைத் தேர்ந்தெடுத்தார். என்னுடைய பணி, ஸ்ரீவித்யாவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, கேமிரா சுழலும் போது,நான் அவருடைய கையை விட்டுவிட்டு நகர்ந்து நிற்கவேண்டும் அல்லது நீருக்குள் மூச்சை அடக்கிக்கொண்டு ஒளிந்து கொள்ளவேண்டும். எதற்கும் நீளமான கயிற்றின் ஒரு பகுதியை என்னிடம் கொடுத்துவிட்டு மற்றொரு முனையைப் பாறையொன்றில் இறுகக் கட்டிவிட்டார்கள்.

இயக்குநர் முன்பு தன் பயத்தைக் காட்டிக்கொள்ளாமல், ஸ்ரீவித்யா என்னிடம் கெஞ்சுவார். 'பாதுகாப்பாக அருகிலேயே நில்லுங்கள்; பயமாக இருக்கிறது; கெட்டியாகக் கையைப்பிடித்துக் கொள்ளுங்கள்; பிளீஸ்.. பிளீஸ்' என்பார். நானும் 'பயப்படாதீர்கள்! நான் பார்த்துக்கொள்கிறேன்' என ஆறுதலாகச் சொல்லி அந்த இடத்தில் நான், என்ஹீரோயிசத்தைக் காட்டுவதற்காக அசட்டுத் ¨தைரியத்துடன் நின்று உதவி செய்தேன். படப்பிடிப்பு முடிந்தவுடன் டைரக்டரும், ஸ்ரீவித்யாவும் எனக்கு நன்றி சொன்னார்கள்.
ஆனால் கரையேறிய பின்தான் ஒன்று  தெரிந்தது. என் பாதத்தில் கடலடிப்பாறை குத்தி ரத்தம் பீரிட்டுவர ஸ்ரீவித்யாவே முன்வந்து மருந்து தடவிக் கட்டுப் போட்டுவிட்டார். அதன்மூலம் தன் நன்றியைத் தெரிவிப்பதாக அது இருந்தது. கதைக்குள் கதைபோல இருந்த அந்நினைவின் சாட்சியாக இன்னும் என் பாதத்தில் அந்த வடு கரிய நிறத்தில் மாறாமல் நின்று காட்சியளித்து வருகிறது.

டோனபாலி கடற்கரை, ஓல்டு கோவா, மர்மகோவா, மலை உச்சி, •பர்ரி எனக் கோவாவின் பல இடங்களிலும் படமெடுத்தோம்.  குறிப்பாக இயேசுவின் தூதுவர்  SAINT FRANSIC  XAVIER   உடல் இன்றும் அழுகாமல் இருக்கிறது அங்கேதான் என்பார்கள்; அந்தப் புனித தேவாலயத்திற்குச் சென்று, காட்சிக்கு வைத்திருக்கும் அவருடையச் சுண்டு விரலைப் பார்த்தோம்; அருகாமையிலும் படப்பிடிப்பு நடத்தினோம். கதிரவன் மறையும் காட்சியுடன் நடிகர்களை இணைத்து வைத்து எடுத்திடப் பலநாட்கள் காத்திருந்துகாத்திருந்து ஒருசில மணித் துளிகள் படத்தில் வரக்கூடிய சிறிய காட்சியைக்கூடச் சிரமப்பட்டு எடுத்தோம். வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் சூரியோதயத்திற்கு முன்பு லொகேஷன் எனத் திரையுலகில் சொல்லும் அந்த படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு எல்லோரும், நடிகர்கள் உள்பட ஆஜராகியிருக்க வேண்டும். சூரியன் மறைந்து விட்டால் போதும், மூட்டைகளைக் கட்டிக்கொண்டு நாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்று விடுவோம்.

குளித்துவிட்டு, சீட்டு விளையாட உட்கார்ந்து விடுவோம். சீட்டு விளையாடும் எங்களில் சிலர் பீர் குடித்துக்கொண்டேயும் ஆடுவர். சிலர் சீட்டு விளையாடாமல் தண்ணீர் அடிக்கத் தொடங்கிவிடுவார்கள். கோவாவிற்கு வந்துவிட்டுக் குடிக்காமல் போவது என்பது அவமானமாம். அப்படியொரு சித்தாந்தத்தையும் தேவைப் படுவோர் சொல்லி, தாங்கள்  செய்யும் தவற்றுக்குச் சமாதானம் தேடிக் கொள்வார்கள். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு பாண்டிச்சேரி, காரைக்கால் போலக் கோவாவும் போதைக்குப் புகழ்பெற்ற இடம். இப்படி யெல்லாம் நடக்கும் என்று தெரிந்தே, புரடக்ஷன் மேனேஜர், எங்கள் இயக்குநருக்கும்,  தயாரிப்பாளர்களுக்கும், நடிகைகளுக்கும் எட்டாத தூரத்தில் உயர்ந்த நட்சத்திர விடுதியில் அறை போட்டு விலக்கி வைத்துவிடுவார். இதை அவர்களும் அறிவார்கள். என்ன கூத்து வேண்டுமானாலும் அடியுங்கள்; மறுநாள் காலை படப்பிடிப்புக்கு மட்டும் தாமதமாக வந்துவிடக்கூடாது என்பதே டைரக்டருடைய கட்டளை. 

நட்சத்திர ஹோட்டலில் அறை வேண்டாம் என்று மறுத்து விட்டு ஜாலியாக இருக்க வேண்டும் என்று எங்களுடன் வந்து, நாங்கள் தங்கும் ஹோட்டலிலேயே தங்கிக் கொண்டார்கள் ஜெய்சங்கரும், ரவிச்சந்திரனும். 'நாங்கள்' என்பது உதவி இயக்குநர்கள், கேமிராமேன்,அவருடைய உதவியாளர், ஸ்டில் போட்டோகிராபர், எடிட்டரின் உதவியாளர், வாடகைக்கு எடுக்கும் அவுட்டோர் உதவியாளர்கள், சிறு வேடங்களில் நடிக்கும் பெரிய நடிகர்கள் என்று ஒரு பட்டாளமே இருக்கும். ஒரு நாள் நடிகர்கள் ஜெய்யும், ரவியும் சேர்ந்து போதையை ஏற்றிக் கொண்டு திடீரென்று எங்கள் அறைக்குள் பீர்கூடக் குடிக்காத அந்த மஹாத்மாக்கள் யார் யார்?' எனக் கேட்டுக்கொண்டு விஜயம் செய்தார்கள். என் நண்பர்கள்; புரூட்டஸாகி என்னைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள். 

அப்புறம் என்ன? என்னை மடக்கிப் பிடித்துக் கொண்டு என் வாயில் பீரை ஊற்றி என்குடியா கற்பை அன்று ஜெய் கெடுத்து விட்டார். இதைச் சொல்லும்போது முன்பு நடந்த இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. வாஹினி ஸ்டுடியோவில் காவியத் தலைவி படப்பிடிப்பு. அது ஒரு தேர்தல் நேரம். எம்.ஆர்.ஆர்.வாசு அன்றிரவின் கால்ஷீட்டில் வந்து  நடித்துத் தரவேண்டும். உடன் நடிக்கும் நடிகர்கள் எல்லாரும் வந்து நடித்துவிட்டு, வாசுவுடன்இணைந்து நடிக்கவேண்டிய காட்சிகளுக்காகக் காத்திருக்கிறார்கள். டைரக்டர் 'எங்கேப்பாவாசு?' என்று கேட்க, புரடக்ஷன் மேனேஜர், வழக்கம்போல் தலையைச் சொரிந்து கொண்டே' பக்கத்திலுள்ள போரூரில் நடைபெறும் தேர்தல் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். இதோ பத்து நிமிடத்தில் வந்து விடுவார் '  என்று பத்து முறை சொல்லியிருப்பார். ஆனால் வந்தபாடில்லை. டைரக்டரும் கேட்டு அலுத்துப்போய் சிகரெட்டை ஊதியதுதான் மிச்சம்.

திடீரென்று வண்டியில் வந்து வாசு இறங்கினார். யூனிட்டே சுறுசுறுப்பானது. தயாராய் இருந்த காட்சிக்கான வசனத்தை, துணை இயக்குநர் சொல்லிக் கொடுத்தார். சரி சரியென்று தலையை ஆட்டிக்கொண்டார். சக்தி அதிகமான விளக்குகளையெல்லாம் போட்டு விட்டு, ஒத்திகைக்கு, டைரக்டர் 'ஆக்ஷன்.. ' என்றார். வாசு வசனங்களை உளறுகிறார். 'சரி சரி மறுபடியும் சொல்கிறேன்' என்று சொல்லிவிட்டு, மீண்டும் உளறுகிறார். எங்கள் யூனிட்அனைவரும் பதற்றத்துடன் நின்றோம். ' அவன் தலையிலே தண்ணியைக் கொண்டு வந்து ஊத்துங்க. சாராயத்தைக் குடிச்சிட்டு வந்தா எப்படி வசனம் பேச முடியும்? அறிவு கெட்ட முண்டம்! முட்டாள்! காத்துக்கிட்டிருந்த மத்தவங்கெல்லாரும் செறச்சிகிட்டா இருந்தாங்க?  குடிகாரப் பயலை வச்சிக்கிட்டு மாரடிக்கறேன்... ( இன்னும் என்னென்ன கெட்ட வார்த்தைகள் இருந்ததோ அதையெல்லாம் சொன்னார். இறுதியில் ) பேக்கப்...( இன்று படப்பிடிப்பு முடிந்தது என்று இயக்குநர் சொல்லும் சொல் ) என்று சொல்லிவிட்டு விடு விடுவென வீட்டிற்குக் காரிலேறிப் புறப்பட்டார். 

எம்.ஆர்.ஆர்.வாசு தன் வாழ்நாளில் அப்படியான வாழ்த்துகளை யாரிடமும் வாங்கிக் கட்டி இருக்கமாட்டார். நாங்களெல்லாம் போய் வாசுவிடம் ' இப்படிச் செய்யலாமா? டைரக்டர் திட்டினதை மனசுல வச்சுக்காதிங்க. நாளைக்கு வாங்க. எல்லாம் சரியாப் போய்டும்.' என்றெல்லாம் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம். வாசுவின் கண்கள் குளமாகி அருவியாயின. ஏற்கனவே என் அண்ணன் நின்ற தொகுதியான வேதாரண்யத்திற்கு, தேர்தல் கூட்டத்தில் பேசுவதற்கென்றே அழைத்துச் சென்றவன் நான். வாசுவின் குடிப்பழக்கம் எனக்கும் தெரியும். பின்பு வாசுவுடன் ஆறுதலாகப் பேசிக்கொண்டே அவரைக் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிட்டு, நான் என் வீட்டுக்குப் புறப்பட்டேன்.

திரைப்பட இயக்குநர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், கிருஷ்ணன் (பஞ்சு) ஆகியோரை அடுத்து இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்தான் நடிகர்களை உரிமையுடன் திட்டி வேலைவாங்கக்கூடிய தைரியம் கொண்டவர் என்பார்கள். அந்த அளவுக்குத் தம் தொழில்மீது அக்கறையும் திறமையும் படைத்த, திரையுலக மார்க்கண்டேயராக இன்றும் வாழ்ந்துவருபவர். இன்று 82 அகவையை உடைய கே.பி அவர்களுக்கு நினைவாற்றல் சற்றுக்குறைந்து வருகிறது. இன்றும் மேடை நாடகங்களை எழுதி அரங்கேற்றி வருகிறார். திரைப்படத்தை நின்று இயக்குவதற்கான உடல்வலு குறைந்து விட்டதாக உணர்கிறார். திரையுலகின் எல்லா நிகழ்ச்சிகளுக்கும், மூத்தவன் என்கிற காரணத்தால் அழைக்கிறார்கள்; செவியின் கேட்கும் திறனும் குறைந்துள்ளது. ஒரே இடத்தில் நீண்டநேரம் உட்கார்ந்திருக்க முடியவில்லை. அதனாலேயே ஒத்துக்கொள்ள மறுத்து விடுகிறார். ஓராண்டுக்கு முன்பு என்னுடைய ஆயபுலம் எனும் புதினத்தைப் படித்துவிட்டு, 'அற்புதமாக இருக்கிறது. உடல் நிலை முன்புபோல் இருந்தால், சில மாற்றங்களைச் செய்துகொண்டு, இதையொரு திரைப்படமாகவே எடுத்துவிடுவேன்.' என்றார். 

அப்படி கே.பி அவர்கள் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு, அந்த நாவலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளச் சிங்கப்பூருக்கு அழைத்தேன். உண்மையிலேயே என்மீது அவர் கொண்டுள்ள பாசத்தினால், மறுக்க முடியாமல் வருகை தந்தார்.  என் இல்லத்திலேயே தங்கிக்கொண்டார். பக்குவமாக ஏற்ற உணவு வகைகளை என் இல்லத்தார் பரிமாறினார்கள்.  எப்போதும் எனக்கு உதவியாக இருக்கிற நண்பர் ராம் அவர்களின் உதவியுடன் மற்றும் தம்பி நெப்போலியன் உடனிருக்கப் பல இடங்களைச் சுற்றிக் காண்பித்தேன். புறப்படும்போது, கே.பி அவர்கள் 'சென்னையையே மறந்துவிட்டு ஐந்து நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தேன். என்வீட்டில்கூட இந்த அளவுக்கு என்னைக் கவனித்துக் கொள்ள மாட்டார்கள், நீங்கள் மிக நன்றாக எந்தக் குறையும் இல்லாமல் கவனித்துக் கொண்டீர்கள். தேங்க்ஸ்! தேங்க்ஸ்!' என்று தழுதழுத்தக் குரலில் சொன்னது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. 

தமிழகம் போகும்போதெல்லாம்  தவறாமல் என் குருநாதரை, அவருடைய இல்லம் சென்று தரிசிக்காமல் வருவதில்லை. கடந்தமுறை சென்னையில் சந்தித்தபோது, என் மனைவிக்குப் பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்து வழியனுப்பினார். அவ்வளவு பெரிய இயக்குநர் ஒருமுறை சிரித்துக்கொண்டே  சொன்னார், ' என்னைப் பார்க்க வேண்டுமானால் ரஜனிகாந்தும், கமல்ஹாசனும் நேரம் கேட்டு, ஓரிரு நாட்கள் கழித்துத்தான் வந்து பார்ப்பார்கள். ஆனால் உனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்றார். 

எனக்கு மெய்சிலிர்த்து விட்டது. யான்பெற்ற பேற்றையெண்ணி யானே மகிழ்ந்துழன்றேன்.அவரிடம் எனக்கு இருந்தவை அன்பும் மரியாதையும் குருபக்தியும்தானே. இன்றும் பிறர் என்னைக் குறிப்பிடும்போது, 'நீங்க என்ன கே. பாலசந்தரின் உதவி இயக்குநர் ஆச்சே' எனப் பலர் சொல்லுபோது,  மோதிரக் கையால் குட்டுப்பட்ட வலியைப் பெருமையாக எண்ணி, இந்த நாரும் அந்தப் பூவுடன் சேர்ந்து மணம் வீசுகிற பழமொழி நினைவுக்கு வரும்.         

அதேபோல் 2002ல்கூட சிங்கப்பூர்ப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்த 'உலக அரங்கில் தமிழ்' என்கிற நிகழ்ச்சிக்குப் பலர் அழைத்தும் வர மறுத்துவிட்டார். பின்னர் நான் அழைத்தால் வருவார் எனப் பிச்சினிக்காடு கிசுகிசுக்க, உதுமான்கனி என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். நான் பேசியதற்குப் பின் கே. பி சார்  சிங்கைக்கு வந்துபோனார் என்பது வரலாறு. 

அதற்குப் பின் தான் உதுமான் கனிக்கும் எனக்கும் மிகநெருக்கமும் பழக்கமும் ஏற்பட்டது. அந்தக் கனி, அணையப் போகிற சுடராக அன்று ஒளிவிட்டதைத் தெரியாமல், அந்தக்கனிச்சுவையை நாளும் பருகிக்கொண்டே இருந்துவிட்டேன். கனி கை நழுவிப் போய் விட்டதே?

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : thangameen@hotmail.com
Tagged :
3 comments:
பனசை நடராஜன் said...
நிறைய சுவையான சம்பவங்களை சொல்லியிருக்கீங்க அண்ணா.. ரஜினி கூட ஒரு பேட்டியில் சொன்னார். படப்பிடிப்பு முடிந்து விட்டதாக நினைத்துக் குடித்து விட்டாராம். அப்போது கே.பி ”இனி படப்பிடிப்பில் குடித்தால் ________ அடிப்பேன்” எனத் திட்டினாராம்..
hussain said...
very nice story.
பிச்சினிக்காடு said...
நன்றாக இருந்தது.
தங்களது கருத்தை இங்கே பதியவும்
Name:  
Email:    
Comments:
 
Eg. Type in English 'Amma' to get in Tamil 'அம்மா'. Press CTRL + G to toggle between English and Tamil
CopyRight 2010 © Goldfish Publications