கவிதை
மரணம் ; சில கவிதைகள்!
சிறுகதை
வானுயர்ந்த கோயில்கள்! : ஜீவகுமாரன், டென்மார்க்
உண்மையைப் போன்ற கதை : சூர்ய ரத்னா
சாமரம் வீசும் பூமரங்கள் : பாலு மணிமாறன்
சிங்கப்பூர் சமூகம்
சிங்கப்பூரில் ஒரு நாகூர் தர்கா : குணசேகர்
தேக்கா ரவுண்டப் : மணி சரவணன்
சிங்கப்பூர் கிளிஷே : ஷானவாஸ்
Nagging - நச்சரிப்பு : வழக்கறிஞர் கலாமோகன்
தமிழுக்குத் தொண்டு செய்த அ சி சுப்பையா : செ.ப.பன்னீர் செல்வம்
கட்டுரை
கனவதிகாரம் ; ரஜினி : இந்திரஜித்
இடைவெளிகள் : இராம.வைரவன்
முந்திரிக் காட்டின் பாடல்! : சுப்ரமணியன் ரமேஷ்
இளமைப் பக்கம்
சொற்சிலம்பம் ; குழுவாக ஒரு பயணம்! : பார்கவ் ஸ்ரீகணேஷ் & சரவணன் சண்முகம்
மாதம் ஒரு மேஜிக் - 1 : கயல் ரவின்
ஒலி & ஒளி
2011 மிஸ்.வசந்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விமலா! : ஆதித்யா
பிரதான விழா 2011 : 26 விருதுகளோடு பிரமாண்ட விழா! : அரவிந்தன்
கலைஞர்களுக்கு மரியாதை : பிரதான விழா 2011 விருதுகள்! : ஆதித்யா
2006 மிஸ்.வசந்தம் இந்திராவின் பேட்டி! : அகிலா அகி
பொது
நாலு வார்த்தை! : பாலு மணிமாறன்
நிகழ்வுகள்
'நினைவுப் பருக்கைகள்' கவிதை நூல் வெளியீடு : சரத் சந்திரன்
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம் லீக்கின் சாதனை நிகழ்ச்சி 'வண்ணங்களின் சங்கமம்' : சிவராணி
சிங்கப்பூரில் அயலகத் தமிழ் இலக்கிய மாநாடு : அரவிந்தன்
விளையாட்டு
ஐ.பி.எல் கிரிக்கெட் : சென்னை மண்வாசனை! : ஆதித்யா
சினிமா
அழகர்சாமியின் குதிரை – அழகியலின் வடிவம் : எம்.கே.குமார்
தமிழ்ச் சினிமா - புதிய களங்கள்! : இவள் பாரதி
கண்மணிக்கு ஒரு கடிதம்! : சித்ரா ரமேஷ்
எஸ். வரலட்சுமி ஓர் அந்தஸ்தான நடிகை : புதுமைத்தேனீ மா. அன்பழகன்
திரை விமர்சனம் : வானம் : எம்.கே.குமார்
மலேசியா
மலேசியக் கால்பந்தில் மின்னும் நட்சத்திரம் சுப்ரா! : கே.எஸ்.செண்பகவள்ளி
ஆடு மேய்த்த அந்த நாட்கள் : ந.பச்சைபாலன்
கடந்து வந்த பாதையிலே...1 : பாலகோபாலன் நம்பியார்
தமிழகம்
சென்னையில் மக்கள் கவிஞர் 81 வது பிறந்தநாள் விழா! : பிச்சினிக்காடு இளங்கோ
Skip Navigation Links
Skip Navigation Links

 
என்னை இயக்குநர் பாலசந்தரிடம் அறிமுகப்படுத்தியதுடன், அவருக்கு உதவியாளராகவும் ஆக்கியவர் திரு.இராம.அரங்கண்ணல் அவர்கள்.  அவருடைய இல்லத்தில் ஒருவராகவும், அவருடைய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான அருள் பிலிம்ஸின் அலுவலகப் பொறுப்பாளராகவும் இருந்தேன் என்பதை அறிவீர்கள். அருள் பிலிம்ஸின் முதல் தயாரிப்பு  'பூவா தலையா'. இது 1969ல்  தயாரான படம்.

ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், எஸ். வரலட்சுமி, ராஜ்ஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ், சச்சு ஆகியோர் நடிக்க, எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க,கதை வசனம் எழுதி இயக்கியவர் என் குருநாதர் கே. பாலசந்தர் அவர்கள்தான். இது ஓர் அதிகாரமிக்க மாமியார் வரலட்சுமியின் கொட்டத்தை அடக்க ஆமாம் போடும்  மருமகன் ஜெமினியின் தம்பி ஜெய் ஒருபுறமும், இன்னொரு மருமகன் நாகேஷ் மறுபுறமும் நடத்தும் போராட்டமும் லூட்டியும்தான் படத்தின் உயிரோட்டம். இதற்காக சென்னை சாந்தோம் பகுதியில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள  கருமுத்து தியாகராஜ செட்டியாரின் விருந்தினர் இல்லத்தைத் தேர்வு செய்து, அனுமதியையும் வாங்கி, படப்பிடிப்பை நடத்தினோம். அந்த உண்மையான அழகிய பங்களாவுக்குப் பக்கத்திலேயே கதைக்குத் தேவையான ஒரு அவுட் ஹவுஸையும் கட்ட, உரிமையாளாரிடம் அனுமதி வாங்கப்பட்டது. அதை கற்கள் வைத்துக் கட்டி நிலைப்படியும் வைத்து,  அவ்விடத்தில் படப்பிடிப்பை நடத்திட வேண்டும். பின்னர்  அவ்விடத்தைத் துப்புரவாகக் காலி செய்து, பழையபடி புல்தரை பூச்செடி வைத்துத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்பதே  ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்.

அந்த அவுட் ஹவுஸைக் கட்டும் பணியைப்  மேற்பார்வையிடும்  பொறுப்பு  எனக்குக் கொடுக்கப்பட்டது.  படப்பிடிப்பு நடத்தும் போதும் நானே  தொப்பியணிந்து,  கையில்  நோட்டுப்  புத்தகத்துடன் நின்று  நடிப்பேன்.  முழுக் கட்டடத்தையும்  கட்டி முடிக்கத் தேவையில்லை. கட்டுவதைக் கொஞ்சம்  காட்டி, அவ்விடத்தில் ஒருசில காட்சிகள் எடுத்த பின், உண்மையாக ஏற்கனவே உள்ள அவுட் ஹவுஸைக் காட்டிவிடுவதே சினிமா. உள்ளே நடக்கும் காட்சிகளை எங்கு வேண்டுமானாலும் இதுதான் உள்ளறை எனக் காட்சிகள் எடுக்கலாம். உதாரணத்திற்கு, நியூயார்க் நகான் நட்சத்திர விடுதி ஒன்றை மிகப் பிரமாண்டமாக வெளியிலிருந்து காட்டி, ஒரு கார் சர்ர்.. என்று வேகமாக ஓடி வந்து போர்ட்டிகோவில்  நிற்பதைக் காட்டி, காரிலிருந்து கதாநாயகி  இறங்குவதையும் அவள் நடந்து உள்ளே செல்வதையும் காண்பித்துவிட்டு, கட்  செய்து காட்சிக்குச்  செல்லும்போது, சென்னை நட்சத்திர விடுதியொன்றின்  மேல்நோக்கிச் செல்லும் மின் தூக்கியுள் அவள் நிற்கும்போது, வில்லன் துப்பாக்கியால்  சுடும் காட்சியை நாம் படமாக்கலாம். அந்த வில்லனை நியூயார்க் நகருக்கு  அழைத்துச் செல்லும்  செலவு மிச்சம். ஆனால் அதே நேரத்தில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அந் நிகழ்ச்சி  நியூயார்க்கிலேயே நடப்பதுபோன்ற உணர்வை உண்டாக்கி விடலாம். இதுதான் சினிமா.

அதே வீட்டுக்குள்தான் ஜெமினி கணேசனை நாகேஷ் வந்து பார்ப்பார். குனிந்து வணக்கம் சொல்வார். பதிலுக்கு ஜெமினியும் வணக்கம் சொல்வார். மீண்டும் நாகேஷ் இன்னும் குனிந்து வணக்கம் சொல்வார். என்னப்பா.. இவ்வளவு தூரம் குனியிர? ' என்று ஜெமினி கேட்பார். அதற்கு நாகேஷ் பதில் சொல்வார். முகத்தை ஒன்றும் தெரியாத கபோதி போல் வைத்துக் கொண்டு, ' இன்னும் குனிவேன்க..தரை இருக்கு' என்று டைரக்டர் சொல்லிக் கொடுக்காத வசனத்தை, சமயோஜித புத்திசாலித்தனத்துடன் சொல்லியதைக் கேட்டவுடன், கேமிரா ஓடி முடிந்த  பின் டைரக்டர் ஓடிப்போய்  நாகேஷைக் கட்டிப் பிடித்து ' சபாஷ்! '- சொல்லி முதுகில் தட்டிக் கொடுத்தார். நாங்களெல்லாம் நாகேஷின் திறமையைக் கண்டு களித்தோம். இதை ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.  இருந்தாலும் இவ்விடத்தில் சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன்.
 
இந்த இடத்தில் எஸ். வரலட்சுமியின் நடிப்பைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். கவிஞர் கண்ணதாசனின் அண்ணனும், தென்னிந்தியத் திரைப்படச் சங்கத்தின் அப்போதையத் தலைவருமான  ஏ.எல். சீனிவாசனின் இரண்டாவது மனைவிதான் வரலட்சுமி. மகாதேவி, சிவகங்கைச்சீமை, வீரபாண்டியக் கட்டபொம்மன் போன்ற  படங்களில் நடித்திருந்தாலும், பூவா தலையா படத்தில் அந்த பணக்கார மாமியார் கெட்டப்புடன், பட்டுச் சேலை, வைர மூக்குத்தி, அட்டிகை, வளையல்கள் மின்ன, வந்து செட்டில் நிற்பார். அங்கு நிற்கும் அத்தனை பேர்களின் கண்களும் அவர்மீது தான் நிலை கொண்டிருக்கும். சுருட்டிவிட்ட கொண்டையைச் சுற்றி மல்லிகைப்பூ வைத்து, வெற்றிலைப் பாக்குப் போட்ட வாய்போல் சிவந்த இதழைத் திறந்து தமிழ் வசனம் பேசுவார். அவருடையத் தாய்மொழித்  தெலுங்கு.  இருந்தாலும் சரியான தமிழ் உச்சரிப்போடு, ஜெய்சங்கருடன் மோதும்போது திமிர் கொண்ட மாமியாராகவும், ஜெமினியின் முன்பு, அடக்கமான, அன்பான மாமியாராகவும் மாறிமாறி நடிப்பார். அடேயப்பா பார்க்க வேண்டுமே அந்த கண்கொள்ளாக் காட்சியை! அந்தப் படம் நூறு நாள் ஓடியதற்கு வரலட்சுமி ஒரு முக்கியக் காரணமாயிருந்தார் என்பது ஓர் உண்மை. இதன் பிறகுதான், என் நினைவு சரியானால் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பணமா பாசமா படத்தில் எஸ். வரலட்சுமியைப் பணக்கார மாமியாராக நடிக்க வைத்து  எடுத்த அப்படம் வெள்ளிவிழா கண்டது என எண்ணுகிறேன்.
 

பூவா தலையா படத்தில் நடித்த ராஜ்ஸ்ரீ ஒரு முறை, சரியாக ஒரு வாக்கியத்தைப் பேச முடியாததால் ஒன்பது முறை திரும்பத் திரும்ப எடுக்க வேண்டியதாயிற்று. அவரும் தெலுங்கு நடிகைதான். அதேபோல் சௌராஷ்டிரா மொழியைத் தாய் மொழியாகக்  கொண்ட வெண்ணிற ஆடை நிர்மலாவைத்  தமிழ் வசனம் பேச வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அவர் காட்சியைப் பற்றியோ, அப்போது பேசி நடிக்க வேண்டிய  வசனம் பற்றியோ எந்த உள்ளுணர்வும் ( without any conscious ) இன்றி வெறுமனே இருப்பார். அவர் நடிப்பையும் ஒரே காட்சிக்குப் பலமுறை எடுக்குபோது ஒரு தமிழ்  நடிகைக் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கமும் விரக்தியும்  ஏற்பட்டு விடும்.

பூவா தலையா படத்திற்காகத்தான் முதன்முதலில் படப்பிடிபிற்காக வெளியூர் சென்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டது. அதற்குப் பிறகுதான் கோவாவும் ஹைதராபாத்தும். அப்போதெல்லாம் வெளியூர் படப்பிடிப்பு குறைவாகத்தான் நடக்கும். மலையோரம் ஆனாலும், ஆற்றோரமானாலும், ஆற்றுக்குள் ஓடமானாலும் ஸ்டுடியோவுக்குள்ளேயே ஆர்ட் டைரக்டரிடம் கதையின் காட்சிகளுக்கேற்ப டைரக்டர் சொல்லிவிட, அவர் தத்ரூபமாக செட் போட்டுக் கொடுத்து விடுவார். இப்போது எதற்கெடுத்தாலும் வெளியூரும், வெளிநாடுமாகிவிட்டன. சின்னத் திரைகளும் அதிகாரித்து விட்டதால் பலர் அழகான வீடுகளை சென்னையிலும், சுற்றியுள்ள நகரங்களிலும் வாடகைக்குக்  கொடுத்துப் பொருளீட்டுகிறார்கள். நாங்கள் அப்போது படமெடுத்த சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்த செட்டியார் பங்களாவை ஒட்டியுள்ள பேருந்து நிறுத்துமிடத்திற்குப் பூவா தலையா வீட்டு ஸ்டாப் என்றே சிலகாலம் பேருந்து ஓட்டுநர்கள் சொல்லிவந்தார்கள்.

குற்றாலம் போவதற்காக தொடர்வண்டிமூலம் தென்காசி போய் இறங்கியவுடன் ஒரு குளிர்ந்த இதமான தென்றல் காற்று மேனியை லேசாக வருடியதை நன்கு உணர்ந்து ரசிக்க முடிந்தது. புதிய அனுபவம். மதுரை போன்ற உள்மாவட்டத்து கிராமத்தின் மக்கள் பலர் கடலைப் பார்த்ததில்லை என்பர். அதேபோல நான் பிறந்த தஞ்சை மாவட்டத்து  கடற்கரையோர கிராமத்து மக்களில் பலர் மலையைப் பார்த்ததில்லை என எனக்கேத் தெரியும். மெயின் அருவி, புலியருவி, தேனருவி, ஐந்தருவி எனப் பல அருவிகள் இருந்தன. ஒவ்வொன்றிலும்  சூரிய ஒளி இருக்கும்போது படப்பிடிப்பு நடக்கும். மற்ற நேரத்தில் அருவிகளே குடியிருப்பாக ஆசை தீரும் மட்டும் குளித்துச் சோர்ந்து போவோம்.

மெயின் அருவிக்கு எதிரே உள்ள நீண்ட மலையடிவாரம். அந்த இடம் மக்கள் வரபோக அகலமான நீண்ட படிக்கட்டுகள், குளிலறைகள், துணி மாற்றும் அறைகள் என இருந்தன. அதைப் பயன்படுத்தி, மனோரமா, ஸ்ரீகாந்த், எஸ்.ராமராவ், போன்றோரை வைத்து, சில நகைச்சுவைக் காட்சிகளை எடுத்தோம்.  கருமுத்துத் தியாகராஜச்  செட்டியாருக்கு அங்கேயும் அருவியை  ஒட்டினாற் போன்று ஓர் அழகான பங்களா இருந்தது. அந்த இடத்தைப் பயன்படுத்தி மனோரமாவே  சொந்தக்குரலில் பாடி நடித்தக் காட்சிகளைப் படமாக்கினோம். பின்னணியில் ஒருபுறம் அந்தப் பங்களாவையும், மறுபுறம் நீர் விழும் அருவியையும் காட்சிப் படுத்தியவை படத்திற்கு மேலும் மெருகூட்டி அழகு சேர்த்தன. என்னைப் போன்று படக் குழுவில் பணி  ஆற்றுபவர்கள் தேவைப்படும் இடத்தில் நிற்போம்; நடப்போம்; தேவைப்பட்டால்  வசனம் பேசுவோம். அந்த இடத்தில் நானும்கூட நடித்திருக்கிறேன்.
 
காட்சிகள் படமாக்கப்படும்போது அட்மாஸ்பியர் மனிதர்கள் என சில ஆண்கள் பெண்களை கேமிரா ஓடும்போது பின்னணியில் நடமாட விடுவோம். அவர்களுக்கு நிபந்தனைகள் விதிப்போம். எக்காரணத்தைக் கொண்டும் கேமிராவைப் பார்க்கக்  கூடாது; சொன்னாலொழிய நிற்கக் கூடாது. அவரவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு போவதுபோலவும், விளையாடிக்கொண்டுப் போவது போலவும் ஒலி  இல்லாமல் போகலாம். அப்படிச் செய்தால் காட்சியைப் படமாகப் பார்க்கும்போது  அது இயற்கையாகவும் அழகாகவும் அமைந்திருக்கும்.
 
சென்னையில் படம் பிடிப்பதாக இருந்தால் அதற்கென்றே நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவித விளக்கங்களையும் சொல்லத் தேவையில்லை. காரணம் அவர்களுக்கு, அதுவேத் தொழிலாக இருப்பதால் எவ்வாறு, காட்சியின் பின்னணியை அலங்கரிப்பது அல்லது இட்டு நிரப்புவது எனத் தெரியும். அதற்காக அவர்களுக்கு கால்ஷீட்டுக்கு இவ்வளவுக் கட்டணம் என ஒரு கணக்கு உண்டு. ஒரு கால்ஷீட் என்பது ஏழு மணி நேரம். துணை நடிகர்கள் என்று அழைக்கப்படும் அவர்களுக்கென்று தனி அமைப்பு உண்டு.  தேவைப்படும்போது படப்பிடிப்பு நடக்கும் இடத்தில், தேவைப்படுவோரைக் கொண்டு வர ஏஜெண்டுகள் உண்டு. அப்படிப்பட்ட  நடிகர்களில் யாரேனும் வாய்திறந்து  வசனம் பேசினாலோ,  நடிகருக்கு மாற்றாக (டூப்) நடித்தாலோ ஊதியம் கூடுதலாகக் கொடுக்கப்பட வேண்டும். வெளியிடத்தில் அல்லது வெளியூரில் படப்பிடிப்பு நடத்துவதெனில் out door unit எனச் சொல்லப்படும் வெளிப்புறப் படப் பிடிப்புக் குழுவினர் உள்ளனர். அவர்களே கேமிரா, ஒலி, ஒளி அமைப்பு அவற்றிற்கான சகல உபகரணங்கள்,  உதவியாளர்கள், போக்குவரத்தையும்  சேர்த்துச்  செய்துக் கொடுப்பதே அவர்கள் பணி.

ஸ்டில் போட்டோகிராபர் என ஒருவர், ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் உடனிருப்பார். பெரும்பாலும் காட்சிகளை இயக்குநர் படமாக்கிக் கொண்டிருக்கும் போதே போட்டோக்களை எடுத்துக் கொண்டே இருப்பார். மறுநாள் அப்படங்களை ஆல்பத்தில் போட்டுக் கொண்டு வந்து கொடுப்பார். போட்டோ எடுக்கும்போது போஸ் கொடுக்கச் சொல்லியும் எடுப்பார்.

இந்தப் படங்கள் இரண்டு வகைகளில் பயன்படும். ஒன்று: தேர்ந்தெடுத்தப் போட்டோக்களின் ஆல்பத்தை வியாபாரம் பேச வரும் விநியோகிப்பாளர்களிடம் காட்டுவார்கள். காட்சிகளின்  சிறப்புகளைச் சொல்லிப் பேரம்  பேசப் பயன்படும், அத்துடன் படம் சம்பந்தமான பல வகையான விளம்பரங்களுக்கும் பயன்படுத்துவார்கள்.

இரண்டு:  ஒரு படக் காட்சி  என்று வைத்துக் கொள்வோம்.  எடுத்துக் காட்டாக, ஒரு நாயகனும், நாயகியும் குடிசை வீட்டுக்குள்ளிருந்து  வெளியே வந்து,  தெருவில் நிற்கும் சைக்கிளில்  ஏறிப் புறப்படுவார்கள். இது சென்னையின் ஸ்டுடியோ ஒன்றுக்குள் செட் போட்டு எடுத்திருப்பார்கள். ஓரிரு மாதங்கள் கழித்து, அதேக் காட்சியின் தொடர்ச்சியாக, சுமார் 150 கிலோமீட்டர் தூரம் தாண்டி பண்ருட்டியை அடுத்த ஒரு கிராமத்தின் வயலோரப் பாதையில் இருவரும்  சைக்கிளில் விரைகிறார்கள், ஒரு பலா மரத்தின் கீழ் நின்று மேலே தொங்கிக் கொண்டிருக்கும் பலாப் பழத்தை அண்ணாந்துப் பார்க்கிறார்கள் என்று எடுப்பதாக வைத்துக் கொள்வோம். அக்காட்சியை மீண்டும் படமாக்கும்போது பல சந்தேகங்கள் எழும். அவள் ஏற்கனவே என்ன புடவை கட்டியிருந்தாள். பொட்டு  வைத்திருந்தாளா, வைத்திருந்தால் அது என்ன மாதிரி, அதேபோல் வளையல்கள்,  காலில் செருப்பு போட்டிருந்தார்களா? அதே சைக்கிள் தானா, கிடைக்காவிட்டால் ஒரு சைக்கிளைத் தயார் செய்து, அதன் வண்ணம், இருக்கை, ஹேண்ட்பார், கேரியர் போன்றவற்றை அதேபோல் தயார் செய்ய அல்லது சரிபார்க்க  அந்த ஆல்பம் பயன்படும்.  இதற்கு கன்டினியூட்டி  என்போம்.
 
படங்கள்  தோல்வியடையப் பல காரணங்கள் இருந்தாலும், என்னைப் பொறுத்த வரையில் நல்ல கதையின்மையைத்தான் முக்கியக் காரணமாகக் கருதுகிறேன். ஒரு படத்திற்கு அடித்தளமாக இருக்க வேண்டியது  கதையமைப்புதான். நடிகருக்காகக் கதை எழுதும்போது கதைக்குள் இருக்க வேண்டிய உயிரோட்டமும், வேறு கதையமைப்புகளிலிருந்து மாறுபட்டு நின்று சுவையைத் தரவேண்டிய  வித்தியாசமான கதைகளையும் அங்கேக் காண முடியாமற் போய்விடுகின்றது.

இம்மாத இதழில் திரைப்படத் தொழிலின் உள்விவரங்களைப் பற்றி சொல்ல வேண்டிய எண்ணச் சூழல் ஏற்பட்டதால்  சொல்லியுள்ளேன். அப்படிப்பட்ட பல தொழில் நுட்பங்களைக் கொண்டதுதான் திரைப்படம். அவ்வளவு சிரமப்பட்டு,  துல்லியமாகப் படத்தைத் தயாரிக்க வேண்டும்.  அப்படி எடுத்து  வெளியிட்டபின்,  பார்த்து விட்டு,  " கருமம்... படமா அது.." என்று விமர்சனம் வரும்போது, படம் சம்பந்தப்பட்டவர்களின் மனம் எப்படி இருக்கும்?   
                                                          
- நினைவலைகள் தொடரும்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : thangameen@hotmail.com
Tagged :
2 comments:
hussain said...
Realy very nice.
பனசை நடராஜன் said...
நிறைய தகவல்களைத் தெரிஞ்சுக்க முடியுது.. தொடருங்க அண்ணா..
தங்களது கருத்தை இங்கே பதியவும்
Name:  
Email:    
Comments:
 
Eg. Type in English 'Amma' to get in Tamil 'அம்மா'. Press CTRL + G to toggle between English and Tamil
CopyRight 2010 © Goldfish Publications